இருமல் சளியை விரட்ட எளிய மூலிகை வைத்தியங்கள்

    ✅உடல் எடையை குறைக்க மூலிகை மருத்துவம்👈

   இருமல் சளியை விரட்ட மூலிகை வைத்தியம்

சளி, இருமல் தொல்லை

     சளி, இருமல் என்பது ஒரு பொதுவான உடல் நல குறைபாடு. இதை சரி செய்ய நம் வீடுகளிலேயே இருக்கும் எளிய மூலிகைகள் உதவுகிறது. இந்த இயற்கை வைத்தியங்கள் சளி, இருமலை நீங்குவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
     சளி இருமலை விரட்ட எளிய, வீட்டிலேயே செய்யக்கூடிய மூலிகைகள் உள்ளன. மேலும் வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கை மூலிகை மருத்துவம் பற்றி இப்பதிவில், விரிவாக காண்போம்.

1. துளசி கஷாயம்🌿

துளசி கஷாயம்

     செய்முறை:

     ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு கைப்பிடி துளசி இலையைக் கிள்ளிப் போட்டு, நன்கு கொதிக்கவைக்கவும். தண்ணீர் பாதியாக சுண்டியதும், சிறிதளவு மிளகுத்தூள் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்துவிடவும்.

     உட்கொள்ளும் முறை:

     இந்தக் கஷாயத்தை வடிகட்டி, இளஞ்சூடாக ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை அருந்தி வர, சளி மற்றும் இருமலிருந்து நிவாரணம் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

2. கற்பூரவல்லி கஷாயம்🌿

கற்பூரவல்லி கஷாயம்

     செய்முறை:

     ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் நான்கு கற்பூரவல்லி இலையை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக சுண்டியதும் அடுப்பை அணைத்துவிடவும்.

     உட்கொள்ளும் முறை:

     இந்த கசாயத்தை வடிகட்டி தினமும் இரண்டு முறை அருந்தி வர, நெஞ்சில் உள்ள சளி குறையும். குழந்தைகளுக்கு சளி இருந்தால், கற்பூரவல்லி இலையை சாறு பிழிந்து, சில துளிகள் தேன் கலந்து கொடுக்கலாம். சளி தொல்லை அதிகமாக இருந்தால், இந்தக் கஷாயத்தின் ஆவியை சுவாசிப்பது நல்ல பலன் தரும்.

3. மிளகு ரசம்🍲

மிளகு ரசம்

     செய்முறை:

     மிளகு, பூண்டு, கொத்தமல்லி, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அரைத்து ரசம் தயாரிக்கலாம். அரைத்த விழுதை புளித்தண்ணீருடன் சேர்த்து, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, நன்கு கொதிக்கவிட்டு, கடைசியாக கொத்தமல்லி இலையை தூவி இறக்கவேண்டும்.

     உட்கொள்ளும் முறை:

     சூடான மிளகு ரசம், சளி, இருமல் இருக்கும் போது உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இது உடலுக்கு வெப்பத்தை ஏற்படுத்தி, சளியை கரைக்க உதவும். இதை சூப் போல தனியாக அருந்தலாம்.

4. இஞ்சி, தேன் கலவை🍯

இஞ்சி தேன் கலவை

     செய்முறை:

     சிறிதளவு இஞ்சியை தோல் சீவி, நசுக்கி சாறு பிழிந்து கொள்ளவும். அத்துடன், சம அளவு தேன் சேர்த்து, நன்றாக கலந்து கொள்ளவேண்டும். இதைக் காற்று புகாத பாட்டிலில் சேமித்து கொள்ள வேண்டும்.

     உட்கொள்ளும் முறை:

     இந்தக் கலவையை ஒரு தேக்கரண்டி வீதம், தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வர, வறட்டு இருமல் மற்றும் தொண்டை வறட்சி மற்றும் எரிச்சல் குறையும். தேன் தொண்டைக்கு இதமளித்து, இருமலைக் கட்டுப்படுத்த உதவும்.

5. மஞ்சள் பால்🥛

மஞ்சள் பால்

     செய்முறை:

     ஒரு கப் வெதுவெதுப்பான பாலில், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்க்கவும். அதை நன்கு கலந்து கொள்ளவும்.

     உட்கொள்ளும் முறை:

     இதை தினமும் இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தால், சளி  மற்றும் இருமல் படிப்படியாக குறையும்.

     முக்கியமான குறிப்பு (Important Notes):📓

     இந்த குறிப்புகள் அனைத்தும் பாரம்பரிய வீட்டு வைத்தியங்கள். குறிப்பிட்ட உடல் நல பிரச்சனைகள் உள்ளவர்கள் அல்லது வேறு மருந்து உட்கொள்ளும் நபர்கள், இந்த மூலிகை வைத்தியங்களைப் பின்பற்றுவதற்கு முன், ஒரு மருத்துவ நிபுணரின் ஆலோசனையை பெறுவது அவசியம். குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் போன்றோர் மருத்துவரின் அனுமதியுடன் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

பொறுப்புத் துறப்பு (Disclaimer):⚠

     இந்த தகவலை பயன்படுத்தி ஏற்படும் எந்தவொரு விளைவுக்கும் நாங்கள் பொறுப்பல்ல. மூலிகை மருத்துவம் என்பது ஒரு வலிமையான பாரம்பரியம். ஆனால், அதை பாதுகாப்பான முறையில் பயன்படுத்த மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது அவசியம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உடல் எடையை குறைக்க மூலிகை மருத்துவம்

கீழாநெல்லி வேர் மருத்துவ குணங்கள்: இயற்கை மருத்துவத்தில் ஓர் அற்புதம்